விநாயகர் துணை !!
- ChayaPuthran
- Jun 14
- 2 min read

இரும்பு தொட்டிலொன்றில்!! இளவம்பஞ்சு மெத்தையில்!!
பஞ்சினும் இலகுவான என் பிஞ்சு மகள் என்னை பார்த்து பார்த்து சிரிக்கின்றாள்!!
அந்த சிரிப்பினில் இறைவனை உணர்ந்தேன்!!
கடவுள் இந்த பாவிக்கு காட்சியளித்த தருணமது!!
என்னை பார்த்து பார்த்து கையையும் காலையும் அசைத்து அசைத்து என் பிஞ்சு மகள் சிரிப்பதை கண்டு கண்டு, கண் கொண்ட பலனை உணர்ந்தேன்!!

எத்தனையோ தவம் செய்து கடவுளை உணரும் ஞானிகள் பெற்ற வரத்தை, எந்த தகுதியும் இல்லாத நான் பெற்ற தருணமது!!.
என் மகளை கண்ட நொடியில் என் மனதில் தோன்றியது அந்த மகர ஜோதி, அந்த புகையில்லா தீபம் என் மனதினுல் தோன்றி நின்றது!!.
கோடான கோடி பக்தர்களுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பாடிக்கொண்டு பெரியபாதை, பம்பை நதி வழியே சென்று பதினெட்டு படியேறி ஐயனை தரிசித்து மகர சங்கராந்தியன்று பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மும்முறை தோன்றி தோன்றி அவர்களுக்கு அருளிவிட்டு மறையும்!!.
ஆனால், அதே மகர ஜோதி என் மகளை பார்த்த வினாடி என் மனதில் தோன்றி நின்றது!! மறையவில்லை, அந்த புகையில்லா தீபம்!
நான் உயிர் கொண்ட பலனை உணர்ந்தேன்!! என் ஜீவன் முக்தி அடைந்ததை உணர்ந்தேன்!!
நேரமும் காலமும் நிறைந்த உலகை தாண்டி, நேரமும் காலமும் அற்ற பிரபஞ்சத்தை அடைந்தேன்!!
உயிரோடிருந்தேன்! ஆனால் இந்த உலகை கடந்து நின்றேன்!.
நேரமும் இல்லை, காலமும் இல்லை, மனதினுல் மகர ஜோதி!, கண்ணில் என் மகளின் சிரிப்பு!! என்னை பிரபஞ்சத்தில் கரைத்தது!!,
'நான்' என்ற ஒன்று இருப்பதையே மறந்தேன்!.

மீண்டும் சிரித்தாள் என் மகள் இந்த முறை அவள் சிரிப்பில் ஒலி எழுப்பி என்னை பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லாமல் சொன்னாள், பொய்யாக நான் வாழ்ந்த வாழ்க்கை மெய்யாக மாறிய தருணமது!!.
என் மகளின் பிஞ்சு விரல்கள் காற்றில் கோலமிட்டு பிரபஞ்சத்தில் மிதந்த என்னை இந்த உலகிற்கு மீட்டுக்கொண்டுவந்தது!!
அந்த நொடி நான் மீண்டும் பிறப்பெடுத்தேன்!!
என் பாவங்கள் கரைந்து புதிதாய் பிறந்தேன்!!
என் பிள்ளைக்கு பிள்ளையாய் பிறந்தேன்!!
என் பிள்ளைக்கு பிள்ளையாய் பிறந்தேன்!!
இனி என் பிள்ளையின் விரல்கள் என் சுண்டு விரல் பிடித்து எனை வழி நடத்தும் என்றுணர்ந்தேன்!!
இனி என் பிள்ளையின் விரல்கள் என் சுண்டு விரல் பிடித்து எனை வழி நடத்தும் என்றுணர்ந்தேன்!!
என் சிந்தையில் எத்தனையோ கற்பனைகள்!!
அதில் என் பிஞ்சு மகள் என் முன்னால் நடந்து புன்னகையுடன் தலையசைத்து என்னை அழைத்து செல்லுகிறாள்!!
என் பிள்ளை அழைத்து செல்லும் பாதையில் உலர்ந்து கிடந்த நான் உளம் மலர்ந்து, பூத்து குலுங்கி தொடர்கின்றேன்!!

என் தாய், நான் என் மகளை பார்த்து பார்த்து வியந்து நின்றதை பார்த்துவிட்டு, என் பிள்ளையின் கன்னதில் தரிஷ்டி படாமலிருக்க வட்டமாய் கறுமை பொட்டிட்டு, என் பிள்ளையை தூக்கி கொண்டு வந்து என் கைகளில் கொடுத்ததாள்!!
அந்த நொடி நான் பெற்ற அனுபவம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, ஏன் உலகின் எந்த மொழியிலும் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை,
பூவினும் மெல்லிய பாதகங்கள்!!
பட்டாம்பூச்சி இமைகள்!!
எந்த தென்றல் காற்றிலும் இல்லாத குளுமை!!
இசையின் இலக்கணங்கள் என் பிஞ்சு பிள்ளையிடம் படிக்கவேண்டிய தேவைகள் அவ்வளவு!!
என் கரத்தில் இட்ட தருணம் என் பிள்ளை எழுப்பிய சந்தோஷ ஓசைகளில் என் காதுகள் கேட்ட இசைக்கு எந்த ராகமும் இணையில்லை!!
பரவசம் இது தான் என்று நான் உணர்ந்த தருணமது!!
என் மகளின் ஸ்பரிசம் என் இதயம் வருடியது!!
நிலையில்லா என் மனம் நின்றது!!
என் மகளின் நினைவில் அந்த புகையில்லா தீபம் என்னை நங்கூரமாய் நிறுத்தி பிடித்தது!!
நானும் ஞானி தான்!!
நானும் பக்தன் தான்!!
நானும் புனிதன் தான் என்று தோன்றியது!!
எல்லாம் என் மகள் நிகழ்த்திய அதிசயங்கள்.
"உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன்" என்ற வாசகங்களை ஆட்டோக்கள் பின்னாடி படித்திருக்கிறேன்.
அது நிகழும் என்று நினைத்தில்லை, ஆனால் இன்று அது நிகழ்ந்ததை உணர்ந்தேன்!!
இறைவன் தான் என் மகளாய் பிறந்து என் கரத்தில் இருப்பதை உணர்ந்தேன்!! நெகிழ்ந்தேன்!!

என் விநாயகா என்னை காக்க வேண்டிய நீ...
என் பிள்ளையாய் பிறந்து என்னை புண்ணியணாக்கினாய்!!
அதோடு உன்னை காக்க எனக்கு ஆணையிடுகிறாய்...,
என்னால் உன்னை வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கத்தெரியும், பாதுகாக்க தெரியாது... என் பிள்ளையாரப்பா!!! நீ தானப்பா என் பிள்ளை!!
நீ கொடுக்கும் பொறுப்பை தாங்கும் சக்தியை கொடுத்து..
என்னை வழி நடத்த வேண்டும் ஐயா.. நீயே துணை,
என் விநாயகர் துணை!!,
என் பிள்ளையார் துணை!!
என் பிள்ளையே துணை!!

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்துக்கள் !!
எனக்கு இது என் பிள்ளையின் தினம் !!
இன்று மட்டுமல்ல என்றென்றும் எனக்கு அது என் பிள்ளையின் தினம் தான்!!
என் வாழ்வின் பொருளே என் பிள்ளை தான் !!
என் பிள்ளையார் எனக்கு தந்த விலை மதிப்பில்லா பரிசு என் பிள்ளை !!
என் பிள்ளையினால் உயர்ந்தேன் !!
என் பிள்ளை வாழ்க வளமுடன்!!
என் பிள்ளையை ஆசீர்வதியுங்கள் ஐயா!!
Comments